7 DMK candidates Ignored : நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களில் 10 பேர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கே வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 பேரில், 7 பேர் மட்டும் ஏற்கனவே ஜெயித்த திமுக வேட்பாளர்களுக்கு கல்தா (7 DMK candidates Ignored) கொடுக்கப்பட்டு களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களில் முக்கியமானவர் கள்ளக்குறிச்சி தொகுதியின் சிட்டிங் எம்.பியும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கவுதம சிகாமணி ஆவார். 1992 முதல் திமுக உறுப்பினராகவும், 2005ஆண் ஆண்டு முதல் ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தொகுதியில் களமிறங்கி வெற்றிக் கனியைப் பறித்தவர் மீது, வழக்கு விவகாரங்கள் விஸ்வரூபமாகி உள்ளது.
கடந்த 2006 முதல் 11ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த பொன்முடியும், கவுதம சிகாமணியும் விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் எடுத்து அரசுக்கு 28 கோடியே 38 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக, அமலாக்கத்துறையும் பொன்முடி மற்றும் கவுதமசிகாமணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறையும் தொடர்ந்துள்ள வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளதால், அவருக்கு மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லையாம்.
ஏற்கனவே அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நிலையில், உச்ச நீதிமன்றம் அதனை நிறுத்தியுள்ளதால் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று மீண்டும் எம்.எல்.ஏ பதவியில் தொடர்கிறார்.
தருமபுரி தொகுதியைப் பொறுத்தவரை சிட்டிங் திமுக எம்.பியாக இருந்த டாக்டர் செந்தில்குமாருக்கு கல்தா கொடுத்துவிட்டு வழக்கறிஞர் மணி என்பவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
மக்களவையில் வடமாநிலங்களை கோமூத்திர மாநிலங்கள் என்று செந்தில்குமார் கூறியது சர்ச்சைகளைக் கிளப்ப, ஸ்டாலினே அவரைக் கடுமையாகக் கண்டிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
இதே போல், பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த அரசு விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூமி பூஜையை இந்து மத பூஜை மட்டும் எதற்காக என்று கேட்டு அதை நிறுத்தச் சொன்னதும் செந்தில்குமார் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதைவிட உதயநிதியின் இளைஞரணி தேர்வு பட்டியல் குறித்து செந்தில்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்த கருத்து கட்சிக்குள் களேபரத்தை ஏற்படுத்தியது. இளைஞர் அணி பொறுத்தவரை நியமனத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியாக நம்புபவன்.
தர்மபுரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இரு அமைப்பாளர்களை விட தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இது போல் நடந்துவிடக்கூடாது என பல கடிதங்கள் அளித்தும் பயனில்லை” என அவர் கூறியிருந்தது,
உதயநிதிக்கு எதிராக கம்பு சுற்றும் வேலையாகவே பார்க்கப்பட்டதாக உடன்பிறப்புகளே குமுறினர். இதன் வெளிப்பாடுதான் மீண்டும் சீட் மறுக்கப்பட்டிருக்கிறது செந்தில்குமாருக்கு என்கிறார்கள் தொகுதி திமுகவினர்.
சேலம் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஆர். பார்த்திபனுக்கு கல்தா கொடுத்துவிட்டு செல்வகணபதியை வேட்பாளராக அறிவித்து உள்ளது திமுக தலைமை.
ஆரம்ப காலத்தில் ஜெகத்ரட்சகனின் வீரவன்னியர் பேரவையில் இருந்த பார்த்திபன், விஜயகாந்த் தொடங்கிய தேமுதிகவில் நுழைந்து தலைமை வரை நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு 2011 சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.
அதன்பின்னர் கட்சிக்குள் நிகழ்ந்த முட்டல் மோதல் காரணமாக அங்கிருந்து வெளியேறி, மக்கள் தேமுதிக என்னும் பெயரில் தனிக்கட்சி கண்டவர், ஒருக்கட்டத்தில் அதையும் கலைத்துவிட்டு கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
வீரபாண்டி ஆறுமுகம் இல்லாத சேலத்தில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள படாத பாடு பட்டவருக்கு2019 தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு சேலம் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
எப்போதும் தனி அணியாகவே பார்த்திபன் செயல்படுவதும் அவரது வளர்ச்சியும் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு கிலி கொடுக்கவே, அவரை ஓரம் கட்டும் எண்ணத்துடனே செயல்பட்டு வந்தவர்கள் இந்த தேர்தலை தங்களுக்கு சாதமாக்கிக் கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி மாற்றுக் கட்சியில் இருந்து வந்த செல்வகணபதியும் தன் மீதான சுடுகாட்டு கொட்டகை ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் அவருக்கு திமுக தலைமை நாடாளுமன்றத்தில் வாய்ப்பளித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினராக கு.சண்முக சுந்தரம் வெற்றி பெற்றதோடு சரி. நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக பொள்ளாட்சி தொகுதியை தவிர்த்து தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, வால்பாறை,
உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்குள்ளும் எட்டிப்பார்த்தது கிடையாது என்று மக்கள் மட்டுமல்ல… திமுகவினரே தலைமைக்கு புகார்களை தட்டிவிட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
கட்சியினரோடும் மக்களோடும் நெருங்காமல் இருந்தவர், எலெக்ஷனுக்காக கடந்த இரண்டு மாதங்களாக தொகுதிக்குள் கம்பு சுற்றியவரை, இதற்காகவே திமுக தலைமை கட்டம் கட்டி மீண்டும் சீட் கொடுக்காமல், கே.ஈஸ்வரசாமிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.
1996 முதல் 2019 தேர்தல் வரை தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிக்கனியைப் பறித்தவர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். இடையில் 2014 தேர்தலில் மட்டும் அதிமுகவின் கு.பரசுராமன் வெற்றி பெற்றார்.
அப்போது போட்டியிட்ட டி.ஆர்.பாலு தோற்பதற்கு பழனிமாணிக்கம் தான் உள்ளடி வேலையை பார்த்தார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
கிட்டத்தட்ட 6 முறை வெற்றி பெற்ற பழனி மாணிக்கம் எப்போதும் பண்ணையார் மனப்போக்கோடு செயல்படுவதால் கட்சிக்குள்ளேயே அவர் மீது அதிருப்தி கிளம்பியிருக்கிறது.
அதே போல் 2019 தேர்தலில் வெற்றி பெற்றவர், நன்றி சொல்லக் கூட தொகுதி பக்கம் வரவில்லை என்றும் புகார்கள் ரெக்கை கட்டிப் பறக்கிறது. தொகுதியில் தனது பெயரைச் சொல்லும்படியான திட்டம் எதனையும் கொண்டு வரவில்லை என்றும் அதிருப்தி அலையடிக்கிறது.
தனக்கென ஒரு கோஷ்டியை சேர்த்துக் கொண்டு வைத்திருப்பவர் எப்படியும் சீட்டு வாங்கிவிட வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் கோடிக்கணக்கில் தருவதாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் கட்சிக்காரர்களின் தொடர் அதிருப்தியால் பழனிமாணிக்கத்துக்கு சீட்டு கொடுக்க திமுக தலைமை ஊசலாட்டத்தில் இருந்த நிலையில்தான்,
தொகுதி பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஷுக்கு நெருக்கமாகி அதன் மூலம் உதயநிதியின் நட்பு வட்டாரத்துக்குள் வந்த முரசொலிக்கு சீட் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
இதனால் பழனிமாணிக்கத்துக்கு சீட்டு இல்லை என்பதை கொண்டாடித் தீர்க்கிறார்கள் தஞ்சாவூர் மாவட்ட திமுகவினர்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2019 தேர்தலில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுகவின் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர்தான் தனுஷ்குமார். ஆனால் 2024 தேர்தலில் அவருக்கு மீண்டும் சீட் கொடுக்கப்படவில்லை.
தேர்தலில் வெற்றி பெற்றதோடு சரி, இப்படி ஒரு எம்.பி இருக்கிறாரா என்று தொகுதி மக்களே, கண்டால் வரச்சொல்லுங்க என கேட்கும் நிலைதான் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது.
2019 திமுக அலையில் தனுஷ்குமார் கரையேறிய நிலையில் மீண்டும் அவர் போட்டியிட்டால் திமுகவுக்கு தோல்விதான் என்று உளவுத்துறை ரிப்போர்ட்டும் தலைமைக்கு சென்றிருக்கிறது.
இந்த நிலையில், நம்பர் 1 ஒப்பந்ததாரரான ஸ்ரீகுமார், தனது மனைவியும் அரசு மருத்துவருமான ராணிக்கு தேர்தலில் வாய்ப்பு கேட்டு திமுக தலைமை வரை காய்களை நகர்த்தியிருக்கிறார்.
சிட்டிங் எம்.பி தனுஷ்குமாருக்கு தொகுதி மக்களிடம் பெரிய அணுசரணையும் இல்லை… செலவழிக்கவும் பசையாக இல்லை என்பது தெரியவர, ஸ்ரீகுமார் வெயிட்டாக தொகுதிக்கு செலவழிப்பதாக வாக்களிக்கவே அவரது மனைவிக்கு சீட் கிடைத்திருக்கிறதாம்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்னும் நிலையில் திமுக எடுத்துள்ள இந்த முடிவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்ன என்பது ஜூன் 4ல் தெரிந்து விடும்.