கடந்த 55 ஆண்டுகளாக 71 வயதாகும் ஆப்பிரிக்க மனிதர் ஒருவர் பெண்களைப் பார்த்து பயந்து தனிமையில் வாழ்ந்து வரும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பலருக்கும் விலங்குகள், நீர், நெருப்பு அல்லது இருண்ட அறைகள் போன்ற பல விஷயங்களைக் கண்டு பயம் ஏற்படும். ஆனால், 71 வயது முதியவர் ஒருவர், பெண்களைக் கண்டு மிகவும் பயப்படுவதாகக் கூறி வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆப்பிரிக்காவின் ருவாண்டாவை சேர்ந்த கேலிட்ஸ் சாம்விட்டா (Callitxe Nzamwita) என்ற முதியவர் கடந்த 55 ஆண்டுகளாக பெண்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் தனது வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடைய 16 வயதில் இருந்து தொடங்கிய இந்த பயம் இன்றும் நீடிக்கிறது.
பயத்தால் பெண்களை பார்ப்பதை தவிர்ப்பதற்காக, தனது வீட்டிற்குள் எந்தப் பெண்ணும் நுழைய முடியாதபடி 15 அடி வேலியைக் கட்டி, தன்னைத் தானே பூட்டிக் கொண்டார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் சாம்விட்டா பேசியுள்ளார். அதில், “நான் என் வீட்டிற்கு வேலி அமைத்து, தன்னைத் தானே பூட்டிக் கொள்ள காரணம், பெண்கள் என்னை நெருங்கி வரக்கூடாது என்பதற்காகத்தான்.” எதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்களை பார்ப்பது பயத்தை ஏற்படுத்தியது” என்று கூறியுள்ளார்.
வீட்டிற்குள் முடங்கி இருக்கும் அவருக்கு அக்கம்பக்கத்தினர் உணவுப்பொருட்களை கொடுத்து அவர் உயிர் பிழைக்க உதவுகிறார்கள். அவர் மிகவும் அரிதாகவே வெளியே காணப்படுவார். அக்கம்பக்கத்தினர் அவருக்குத் தேவையானதை அவர் வீட்டிற்குள் வீசுவார்கள். அவர்கள் அங்கிருந்த்து சென்றவுடன் அந்த பொருளை அவர் எடுத்துக்கொள்வார். ஒரு பெண் அவரது வீட்டை நெருங்கும் போதெல்லாம் அவர் விரைவாக வீட்டிற்குள் ஓடி கதவை பூட்டி கொள்வார் என்றும் அவரது பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மனநல நிபுணர்கள் கூறுகையில், “அந்த முதியவர் பெண்கள் மீதான பகுத்தறிவற்ற பயமான Gynophobia என்ற உளவியல் நிலையால் பாதிக்கப்ட்டுள்ளார். Gynophobia அறிகுறிகள் பெண்களின் மீதான பகுத்தறிவற்ற மற்றும் மிகுந்த பயம் மற்றும் அவர்களை நினைத்து கூட தூண்டக்கூடிய பதட்டமாக இருக்கலாம். பீதி தாக்குதல்கள், மார்பில் இறுக்கம், அதிக வியர்வை, இதயம் வேகமாக துடித்தல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவையும் அடங்கும் என்று விளக்கமளித்துள்ளார்.