கர்நாடகாவில் செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்து விளையாடிய 8 மாத பெண் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகத்தின் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர்கள் சந்தோஷ் கல்குட்கர், சஞ்சனா தம்பதி. இந்த தம்பதிக்கு 8 மாதத்தில் சானித்யா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று செல்போனை சார்ஜரில் போட்டுள்ள தம்பதி, அந்த செல்போன் சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்து விட்டு பிளக்கில் செருகி இருந்த சார்ஜர் இணைப்பை அணைக்காமல் விட்டுவிட்டனர்.
இந்த நிலையில் தம்பதியின் 8 மாத குழந்தை சானித்யா அந்த சார்ஜர் வயரை பிடித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அந்த வயரை தனது வாயில் வைத்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் குழந்தையை தாக்கியதில் குழந்தை சானித்யா உயிரிழந்தாள்.
இந்த சம்பவம் குறித்து கார்வார் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்த விசாரணையில், பிளக்கில் இணைந்திருந்த செல்போன் சார்ஜர் வயரை தம்பதியினர் அணைக்காமல் இருந்ததால், அந்த சார்ஜர் வயரை வாயில் வைத்து விளையாடியதும், அப்போது மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்தும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.