மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலருக்கு வளைகாப்பு – முன் நின்று நடத்திய பெண் டி.எஸ்.பி – சர்ப்ரைஸ் விசிட் அடித்த எஸ்.பி..
சூலூர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை பெண் காவலருக்கு சக காவலர்கள் மற்றும் பெண் டி.எஸ்.பி தையல்நாயகி வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூரில் செயல்பட்டு வரும் கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் இந்து பிரியா.
8 மாத கர்ப்பிணியான இந்து பிரியாவுக்கு வளைகாப்பு செய்ய உடன் பணியாற்றும் காவலர்கள் மற்றும் ஆய்வாளர் சுமதி ஆகியோர் முடிவெடுத்து, காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
பாரம்பரிய முறைப்படி வளையல் அணிவித்து மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட திரவியங்களுடன் 10 வகையான உணவுகளை படையலிட்டு காவலர் இந்து பிரியாவுக்கு வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டது. இந்த வளைகாப்பு நிகழ்வை கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி முன்னின்று நடத்தினார். அப்போது சூலூர் காவல் நிலையத்து வந்திருந்த மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன், மகளிர் காவல் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்து அங்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.
உள்ளே நுழைந்ததும் கர்ப்பிணியான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், இந்து பிரியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்களே சக காவலருக்கு வளைகாப்பு செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.