கோத்தகிரியில் சாலை (road) வசதி இல்லாத நிலையில், நிறைமாத கர்ப்பிணியை மருத்துவமைக்கு தூக்கிச் செல்லும் வழியிலேயே பிரசவம் நடந்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, சாலைகளை (road) சரி செய்தது தருமாறு அப்பகுதி வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட அட்டவளை பாரதி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு நகர் புறத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் இரண்டு கிலோமீட்டர் ஒத்தையடி பாதையை பயன்படுத்த வேண்டும்.
இதனிடையே இன்று பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த செளமியா என்ற 23 வயதேயான நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து உடனடியாக குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் , சாலை வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிக்கொண்டு ஒற்றையடி பாதையில் சென்ற போது வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
சிறிது நேரத்தில் பிறந்த குழந்தையும் இறந்த நிலையில், உடனடியாக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு தூக்கிச் செல்லபட்ட கர்ப்பிணி மற்றும் குழந்தை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கோத்தகிரியை சுற்றியுள்ள பல கிராமங்கள் சாலை வசதி இல்லாமல் அவசர மருத்துவ தேவைகளுக்காக செல்ல முடியாத நிலை தொடர்கிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வட்டப்பாறை கிராமத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நோயாளியை கிராம மக்களே தொட்டில் கட்டி கரடு முரடான தேயிலை தோட்டங்கள் வழியாக தூக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறிய நிலையில், மீண்டும் அட்டவளை பாரதி நகர் கிராமத்தில் நிறைமாத கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பிரசவம் ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நீண்டகாலமாக பாரதிநகர் பகுதிக்கு சாலை வசதி கேட்டு கோரிக்கை வைத்து வருவதாகவும் இதுநாள் வரையில் தங்களுக்கான சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மருத்துவ தேவைக்கு கூட சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கும் அப்பகுதி மக்கள், தங்களுக்கு சாலை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.