நாகர்கோவிலில் கடந்த 2 வருடங்களாக தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தங்களை தாங்களாகவே சிறை வைத்து கொண்டு (locked house) ஒரு குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள ஓல்ட் ஸ்டேட் பாங்க் காலனி தெருவில் பெர்ஷியஸ் அலெக்சாண்டர்- மாலதி தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்த இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் இரண்டு மகள்களும் தங்களை தாங்களாகவே வீட்டில் சிறைவைத்து (locked house) கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக வெளியே வரவில்லை என சமூக நலத்துறை அதிகாரிக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்துள்ளனர்.
அதையடுத்து, தகவலறிந்து, நேற்று முன் தினம் தீயணைப்பு துறை அதிகாரிகள், காவல் துறையினரின் உதவியுடன் சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையில் அவர்களின் வீட்டிற்குச் சென்றனர்.
அங்கு, வீடு பூட்டிய நிலையில் இருந்த நிலையில், இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது சரிவர பதில் தெரிவிக்கவில்லை. மேலும், வீட்டினுள் இருந்தவர்களை கூப்பிட்டும் பதில் வராததால் உடனடியாக வீட்டின் கதவை அகற்றி தீயணைப்புத் துறையினர் வீட்டின் மதில் ஏறி குதித்து உள்ளே புகுந்து சென்று பார்த்தனர்.
அதையடுத்து, பூட்டிய வீட்டுக்குள் வழக்கறிஞரான பெர்சியஸ் அலெக்ஸாண்டர் அவரது மனைவி மாலதி மற்றும் பட்டப் படிப்புகள் முடித்த இரண்டு மகள்களும் இருந்தனர். அதன் பிறகு, அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறியுள்ளனர்.
தங்களுக்கு உயிர் ஆபத்திருப்பதாகவும், மர்ம நபர்கள் சிலர் தங்களை திட்டமிட்டு கொலை செய்ய மறைந்து இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும், தாங்கள் ஏசு விடம் நேரடியாக பேசுவதாகவும், தற்போது பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இப்போது தாங்கள் நலமாக இருப்பதாகவும், தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறியதை அடுத்து, போலீசார் அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றனர் .
சம்பவத்தின் போது அவர்களுடைய உறவினர் ஒருவர் அத்துமீறி இதுபோன்று வீட்டில் புகுந்து விசாரணை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது என போலீசாரிடமும், செய்தியாளர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சற்று பரபரப்பான சூழல் காணப்பட்டது.