திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் காவலர்கள் முன்னிலையிலேயே விவசாயி (farmer) ஒருவர் விஷம் அருந்தியதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அலட்சியமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் குள்ளலக்குண்டு பகுதியில் வசித்து வருபவர் பாண்டி. இவர் அப்பகுதியில் விவசாயம் (farmer) செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமலை அடிவாரப் பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான நிலத்தை, பள்ளப்பட்டியைச் சேர்ந்த சிலர் மிரட்டி பறிக்க முயல்வதாக பாண்டி அவரது மகன் சதீஷ் கண்ணன் ஆகியோர் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
ஆனால், இந்த புகார் குறித்து காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், விரக்தியடைந்த பாண்டி கடந்த 7ம் தேதி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யாததைக் கண்டித்து அவர் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து காவலர்கள் முன்னிலையில் குடித்துள்ளார்.
இந்நிலையில், அதனை அங்கிருந்த காவல் ஆய்வாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் விஷம் அருந்திய அவர் சில நிமிடங்களில் அரை மயக்கத்தில் சற்று சரிந்த நிலையில் அமர்ந்திருந்தார்.
ஆனால், காவல் துறையினர் தங்களுக்கு ஏதும் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காக விவசாயியை தொடர்ந்து தங்கள் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் விஷம் அருந்துவததை தடுக்கவோ, அவரை காப்பாற்றும் முயற்சியிலோ ஈடுபடாமல் இருந்துள்ளனர்.
மேலும், அங்கிருந்த பெண் ஆய்வாளர் சண்முக லட்சுமி, விவசாயி விஷம் குடிப்பது போல நடிப்பதாகவும், முகத்தில் மட்டும் விஷத்தை தெளித்து வைத்திருப்பதாகவும் செல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில், இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவசாயி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். விவசாயி உயிரிழந்ததைத் தொடர்ந்து அவர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, விவசாயி அளித்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், அவர் உயிரிழந்த பின்னர் நடவடிக்கை எடுப்பது தேவையற்றது என சமூக ஆர்வலர்கள் காவலர்களுக்கு எதிராக குற்றம் சாட்டியுள்ளனர்.