ராசிபுரம் அருகே சரக்கு வாகனம் மோதி கூலித் தொழிலாளி கால் துண்டித்து சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அவ்வழியாகச் சென்ற திமுக பட்டணம் பேரூராட்சி துணைத் தலைவர் நல்லதம்பி தனது இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல்…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பரமேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(52) கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், ராஜேந்திரன் தனது இரு சக்கர வாகனத்தில் ராசிபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.
ராசிபுரத்தில் இருந்து பட்டணம் நோக்கி அதிவேகமாக சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனம் ராஜேந்திரனின் இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ராஜேந்திரன் கால் துண்டாகி சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக சென்ற பட்டணம் பேரூராட்சி துணைத் தலைவர் நல்லதம்பி தனது இரு சக்கர வாகனத்தில் ராஜேந்திரனை ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், ராஜேந்திரனுக்கு ராசிபுரம் தனியார் மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு,மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் வருகைக்கு எதிர்பார்க்காமல் விபத்தில் சிக்கிய நபரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற துணை தலைவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.