ஸ்ரீமதி மரணம் குறித்த வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீமதி பெயரில் கட்டி இருந்த இன்சூரன்ஸ் பணத்தை எடுக்க சான்றிதழ் கேட்டு, அரசு மருத்துவர் தரப்பினரை அவரது தாயார் செல்வி மிரட்டியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி உள்ளது, மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவியின் மரண வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் பரபரப்பு ஆரம்பத்தில் இருந்தே நீடித்து வரும் நிலையில், மாணவியின் மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீதி மன்றத்தின் கடுமையான எச்சரிக்கையை அடுத்து ஸ்ரீமதியின் செல்போன் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீமதி பெயரில் கட்டிய இன்சூரன்ஸ் பணத்தை எடுக்க சான்றிதழ் கேட்டு அரசு மருத்துவர் தரப்பினரிடம் ஸ்ரீமதியின் தாயார் செல்வி பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் மெடிக்கல் சான்றிதழ் தரமுடியாது என்று சொல்வதற்கு என்ன காரணம் என ஆவேசமாக பேசுவது பதிவாகியுள்ளது.
மேலும் புதன்கிழமை வரைக்கும் அவகாசம் தருகிறேன் என்றும் அதற்குள் அந்த சான்றிதழை தரவேண்டும் என்றும் மிரட்டும் தோணியில் பேசுவதோடு, தான் சான்றிதழ் கேட்டதை மட்டும் பள்ளி நிர்வாகத்துடன் சொல்லிக் கொடுத்தவர்கள், மகளின் மரணத்திற்கான காரணத்தையும் வெளிப்படையாக சொல்ல வேண்டியது தானே என ஆதங்கத்துடன் பேசுவதும் பதிவாகி உள்ளது.
கொலையா தற்கொலையா என குறிப்பிடாமல் மர்ம மரணம் என எழுதிக் கொடுங்கள் என்றும் சான்றிதழ் தரவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாகவும் அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது.
மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி மிரட்டியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி உள்ள நிலையில் மீண்டும் ஒரு முறை கனியாமூர் கலவரம் போன்ற சூழல் ஏற்பட்ட விடுமோ என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீமதி மரண விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் மருத்துவர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து சான்றிதழ்கள் கொடுக்க முடியாது என கூறப்படும் நிலையில், தொடர்ந்து ஸ்ரீமதியின் தாயார் சான்றிதழை கொடுக்க வற்புறுத்தியதாகவும் சான்றிதழ் தராத கோபத்தில் இவ்வாறு கோபமாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
இருப்பினும் ஸ்ரீமதியின் தாயார் மருத்துவர்களிடம் சான்றிதழ் கேட்டது சக்தி மெட்ரிக் நிர்வாகத்திற்கு எப்படி தெரிந்தது? சான்றுதலை கொடுக்கக் கூடாது என சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது