தர்மபுரி அருகே கதிர் அடிக்கும் எந்திரத்தில் (harvesting machine), சிக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த கேத்திரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைப்பட்டி அடுத்த அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் கோவிந்தசாமி என்பவருக்கு 13 வயதில் சுபா என்கிற மகள் உள்ளார். இந்நிலையில், சுபா கேத்திரெட்டிப்பட்டி அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இதனையடுத்தது, சம்பவத்தன்று சுபா தனது மாமா சக்திவேலின் தோட்டத்தில் ராகி கதிர் அடிக்கும் எந்திரம் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கதிர் அடிக்கும் எந்திரத்தின் (harvesting machine) ஒரு பாகம் பள்ளி மாணவியின் தலையில் பட்டதால் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
உடனடியாக, இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடத்தூர் காவல் துறையினர், உயிரிழந்த மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதன் பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவி உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.