கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ’தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்’ என்ற தலைப்பில்,முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
1977 ஆம் ஆண்டு என்னுடைய TMU 5004 பியட் காரில் மியூசிக் அகாடமி பக்கம் ஓட்டிக் கொண்டிருந்தேன். பின்னால் ஒரு வண்டி வந்துகொண்டிருந்தது. வண்டியில் வந்துகொண்டிருந்தவரை என் கார் கண்ணாடி மூலம் உற்றுப்பார்த்தேன். நன்கு தெரிந்த முகம். கண்ணில் கருப்புக்கண்ணாடி கலைஞர் என்று தெரிந்தது. நான் அப்படியே இடது பக்கமாக ஒதுங்கி வழி விட்டேன். எனது காரை கடக்கும் போது அவர் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்து கைகளை ஆட்டினார். காரில் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்த அந்த சிரிப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதுதான் நான் கலைஞர் அவர்களை முதல் முதலில் பார்த்தது.
நான் 1980ல் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைஞர் அவர்களின் நண்பர் மற்றும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர். அந்தத் திரைப்படத்தின் வசனங்கள் தயாரிப்பாளருக்கு திருப்தி தரவில்லை. படம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் தயாரிப்பாளர் என்னிடம் வந்து “நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை சொல்கிறேன்.. நம் படத்துக்கு கலைஞர் அவர்கள் வசனம் எழுத ஒப்புக் கொண்டார்”என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். எனக்குத்தூக்கி வாரிப் போட்டது.
எளிமையான தமிழ் வசனங்களைபேசி நடிப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நான் கலைஞரின் வசனங்களை பேசி நடிப்பதா ??? நடக்காத காரியம்… இதற்கு நான் கர்நாடகாவிற்கே ஓடிப்போய் மறுபடியும் பேருந்தில் டிக்கெட் விற்க ஆரம்பித்து விடலாம். தயாரிப்பாளரிடம் முடியவே முடியாது என்று கூறினேன். இதைக் கேட்ட தயாரிப்பாளருக்கு இடி விழுந்த மாறி ஆயிற்று. அவர் வசனம் எழுத சம்மதித்ததே நமக்கு கிடைத்த பாக்கியம். அவர் வசனம் எழுதினால் நம் படம் மிகப்பெரிய வெற்றி அடையும்.
உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் இதற்கு ஒப்புக்கொள்ளுங்கள் இல்லையென்றால் அவர் எழுத சம்மதித்த பிறகும் நீங்கள் வேண்டாம் என்று கூறியதை அவரிடம் நான் எப்படி சொல்வது என்று திண்டாடினார். நான் அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுங்கள், நானே அவரிடம் சொல்கிறேன்என்று கூறினேன். அவரும் வேண்டா வெறுப்பாக சரி என்று சொல்லி கலைஞர் அவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.
கலைஞர் அவர்களைசந்திக்க கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்றேன். தமிழ் நாட்டுக்கே தெரிந்த லக்ஷனமான வீடு. அவருடைய உதவியாளர் சண்முகநாதன் அவர்கள் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய படிக்கட்டுகள் மூலம் என்னை கலைஞர் இருக்கும் அறைக்குள் அழைத்துச் சென்றார். 1977 ல் மியூசிக் அகாடமி அருகில் பார்த்த அதே முகம்.., அதே புன்னகை… வாங்க என்று அவருக்கே சொந்தமான அந்த கரகரப்புக் குரலில் என்னை அழைத்து நலம் விசாரித்தார். பின்பு “கதையைக் கேட்டேன்… நன்றாக இருக்கிறது. சிறப்பாக வசனங்களை எழுதிடலாம்” என்றார். நான் அவரை சார் என்று தான் அழைப்பேன். “சார் உங்கள் வசனங்களை நான் பேச முடியாது.
எவ்வளவு வேதனைகள், சங்கடங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள் என அத்தனையும் தாண்டி தொண்டர்களுக்கு அவர் எழுதிய ஆயிரக்கணக்கான கடிதங்கள், கட்டுரைகள், மேடைபேச்சுகள், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் கட்டுக் கோப்பாக ஒரு தனி ஆளாக கட்சியை வழி நடத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால் அது ஒரு மாபெரும் புரட்சி.
கருணாநிதியின் இதயத்தில் தனக்கென்று ஒரு தனி இடம் இருந்தது, அதனால்தான், எந்த ஒரு விழாவிலும் தன்னை அவரது அருகில் அமர வைத்து மகிழ்வார் என்பதை நினைக்கும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது என தனது மலரும் நினைவுகளை ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.