காதலுக்கு மறுத்த கல்லூரி மாணவியை காதலன் இரும்பு கம்பியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடி அருகே உள்ள மாத்தூரில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் இளைய மகள் சினேகா அழகப்பா கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணிதவியல் படித்து வந்தார்.
மாணவி சினேகா ஞாயிற்றுகிழமை வீட்டருகே உள்ள ரேஷன் கடை சந்தில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.அந்தவழியே சென்றவர்கள் பார்த்து சினேகாவின் வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர் சினேகாவின் தந்தை மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த பொழுது சினேகா பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாக்கோட்டை காவல் துறையினர், மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்தில் காரைக்குடி டிஎஸ்பி வினோஜி விசாரணை நடத்தினார். விசாரணையில் காதல் பிரேக் அப்பால் நிகழ்ந்த விபரீத சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
மாணவி சினேகாவை புது குடியிருப்பைச் சேர்ந்த சென்ட்ரிங் வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் 3 வருடமாக காதலித்து வந்துள்ளார்.இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் மாணவியின் அழைப்பின் பேரில் கடந்த மாதம் மாணவியை பெண்கேட்டு குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
அப்போது மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த பின்னர் தான் இளையவளுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என்று சினேகாவின் பெற்றோர் கூறியுள்ளனர். அப்போது சினேகாவை வீட்டை விட்டு வா நாம் பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி அழைத்ததால், சினேகாவின் தாத்தா எச்சரித்துள்ளார்.
அவரை கண்ணன் தாக்கி கீழே தள்ளிவிட்டதால் இந்த சம்பவம் குறித்து சினேகா பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் கண்ணனை அழைத்து எச்சரித்து அனுப்பி உள்ளனர்.தாத்தாவை தாக்கியதால் கண்ணன் உடனான காதலை சினேகா பிரேக் அப் செய்துள்ளார்.
ஒரு மாதமாக கண்ணனின் செல்போன் அழைப்புகளை சினேகா ஏற்காமல் இருந்துள்ளார். இதனால் கண்ணன் கடுமையான ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.இதனால் சம்பவத்தன்று மாணவியை செல்போனில் அழைத்த கண்ணன், காதலித்தபோது பதிவுத் திருமணம் செய்வதற்காக கொடுத்து வைத்திருந்த தன்னுடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை திரும்பக்கேட்டு அழைத்துள்ளார்.
அவற்றை திருப்பிக் கொடுக்கச் சென்ற சினேகாவை கட்டாயப்படுத்தி பதிவு திருமணம் செய்து கொள்ள அழைத்துள்ளான் கண்ணன். அதற்கு மறுத்த சினேகாவின் மொபட் சாவியை பறித்து சென்றுள்ளான் கண்ணன்.அவனை பின் தொடர்ந்து சென்ற சினேகாவை சென்ட்ரிங் கம்பியால் தலையில் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியதும் தானும் உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாக கூறியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் காவல்துறையில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து காரைக்குடி டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் கண்ணனை தீவிரமாக தேடிவருகின்றனர்.காதலை பிரேக் அப் செய்த கல்லூரி மாணவி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.