உயர் மின்னழுத்த கம்பியின் அருகே நின்று பவர் பாங்கில் சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போன் பேசிய போது மின்சாரம் தாக்கி (electrocuted) இளம்பெண் உடல் கருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சானடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் ஏராளமான தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், அந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானவர்கள் மேற்கு தாம்பரம், கடப்பேரி, திருநீர்மலை சாலையில் உள்ள விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், திருநீர்மலை சாலையில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் சிலர் தங்கி மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
மேலும், அந்த விடுதி அமைந்துள்ள கட்டிடத்தின் அருகில் துணை மின் நிலையத்திற்கு செல்லும் உயரழுத்த மின்கம்பி செல்கிறது.
இந்நிலையில், விடுதியின் அறையில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 19 வயதாகும் கும்கும் குமரி என்ற பெண் நேற்று காலை செல்போனில் சார்ஜ் இல்லாததால் பவர் பேங்க் மூலம் சார்ஜ் போட்டு கொண்டே செல்போனில் பேசியுள்ளார்.
அப்போது, சலவை செய்து காய போட்டு இருந்த அவரது துணிகள் உயர் அழுத்த மின்கம்பி செல்லும் பகுதியில் விழுந்து விட்டது. இதையடுத்து, அந்தப் பெண் பிளாஸ்டிக் சேர் ஒன்றை போட்டு அதில் ஏறி அந்த துணியை எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
அப்போது, செல்போனில் பேசிக்கொண்டே உயர் அழுத்த மின்கம்பி அருகில் சென்ற போது செல்போனின் கதிர்வீச்சால் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து (electrocuted) பலத்த சத்தத்துடன் செல்போன் வெடித்து சிதறியதில் கும்கும் குமாரி சம்பவ இடத்திலேயே உடலில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி அலறித் துடித்துள்ளார். இச்சம்பவத்தால் அந்த கட்டிடம் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது.
மேலும், இந்த விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 20 வயதாகும் பூனம் என்ற இளம்பெண்ணும், 24 வயதாகும் ஊர்மிளா குமாரி என்ற பெண்ணும் மின்சாரம் தாக்கியதில் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து, இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அங்கு வந்து மின்சார இணைப்பைத் துண்டித்தனர். பின்னர், மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற இரண்டு பெண்களும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து, இந்த விபத்து தொடர்பாக விடுதி மேலாளர் கணேஷ், கட்டிட உரிமையாளர் நடராஜ் மற்றும் விடுதி மேற்பார்வையாளர் தமிழ் அழகி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.