குஜராத்தை சேர்ந்த கூட்டுறவு பால் நிறுவனமான அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் ஆவினுக்கு போட்டியாக வட மாவட்டங்களில் பால் கொள்முதல் செய்வதற்கான கூட்டுறவு கட்டமைப்புகளை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டில் பால் புரட்சியை ஏற்படுத்திய பெருமை பெற்ற அமுல் நிறுவனம், மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கு எல்லாம் முன்னோடி தாய் நிறுவனம் ஆகும்.
வலுவான கட்டமைப்புகளை கொண்ட அமுல் நிறுவனத்தின் இந்த ஊடுருவல் ஆவின் நிறுவனத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட மாவட்டங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பால் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அமுல் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
ஏற்கனவே ஆவின் நிறுவனத்தில் பல்வேறு நிர்வாக குளறுபடிகள் நிலவி வரும் சூழ்நிலையில், அந்த துறை சார்ந்த அமைச்சரே நீக்கப்பட்டு புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அமுல் நிறுவனத்தின் இந்த ஊடுருவல் பிரச்சனை தலை தூக்கி உள்ளது.
ஏற்கனவே பால் விநியோகத்தில் குளறுபடிகள் , விலை ஏற்ற பிரச்சனை ஆகியவை நிலவி வரும் நிலையில், தற்போது அமுல் நிறுவனத்தின் இந்த ஊடுருவல் ஆவினுக்கு நிச்சயம் அழிவை ஏற்படுத்தும் என்பதை பால் உற்பத்தியாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கங்கள் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகின்றன.
அமுல் நிறுவனத்தின் இந்த ஊடுருவல் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே வரும் நிலையில், அதனை உடனடியாக தடுத்து நிறுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை திரட்டுவதற்கு சிங்கப்பூர் சென்றுள்ள நிலையிலும், இந்த பிரச்சினையின் அவசியம் மற்றும் அவசரத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் இந்த கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதியுள்ளார்.
அமுல் நிறுவனத்தின் ஊடுருவலில் இருந்து ஆவினை பாதுகாக்க அதன் நிர்வாகத்தில் நிலவும் சீர்கேடுகளை கலைந்து, தேவையற்ற செலவினங்களை குறைத்து ,பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க இன்னும் பல அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பால் கொள்முதலை அதிகரிக்க பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து, கொள்முதல் விலையை தாமதம் இன்றி லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும்.
ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை லிட்டருக்கு 5 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை விலையை விட ,
லிட்டருக்கு ஆறு ரூபாய் குறைவாக இருக்கும் வகையில் ஆவின் பால் விற்பனை விலையை ஒரே சீரான அளவில் உயர்த்தும் பட்சத்தில் ஆவின் நிர்வாகத்தையும், பால் விற்பனையையும் எளிதாக சீரமைக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்த முக்கியமான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்காவிட்டால் அமுலின் ஊடுருவலில் இருந்து ஆவினை காப்பது சிரமம் என்றும் பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.