பெங்களூருவில் நடந்த ‘சித்தா’ பட செய்தியாளர் சந்திப்பில், கன்னட அமைப்பினரால் பாதியிலேயே வெளியேற்றப்பட்ட நடிகர் சித்தார்த்திடம் நடிகர் பிரகாஷ்ராஜ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
நடிகர் சித்தார்த் தானே தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. இப்படம் கன்னடத்தில் ‘சிக்கு’ என்ற பெயரில் வெளியானது.
இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக பெங்களூரு சென்ற நடிகர் சித்தார்த் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார் . பத்திரிகையாளர்களுடன் சித்தார்த் பேசிக் கொண்டிருந்தபோது காவிரி பிரச்சைனையை வலியுறுத்தி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குள் வந்த கன்னட ஆதரவாளர்கள் சிலர் நிகழ்ச்சியை நிறுத்த வலியுறுத்தினர்.
இரு மாநிலத்திலும் காவிரி விவகாரம் குறித்து பிரச்னை நிலவி வரும் நிலையில் கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது மேலும் அரசால் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீங்கள் எப்படி நிகழ்ச்சி நடத்தலாம் என கூறி சித்தார்த்தை அங்கு இருந்து வெளியேற கன்னட ஆதரவாளர்கள் சிலர் வலியுறுத்தினார். இதனால் மேடையில் செய்வதறியாது அமர்ந்திருந்த நடிகர் சித்தார்த் பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றபட்டார்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த் கன்னட ஆதரவாளர்கள் சிலரால் வெளியேற்றப்பட்ட சம்பவத்திற்கு திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் பிரகாஷ் அவரது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
“நீண்ட காலமாக இருக்கும் பிரச்னையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களையும் கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும்,சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.