ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்,நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்த திரைப்படத்தை 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இந்த படத்தில் ராஜாக்கண்ணு – செங்கேணி என்ற இருளர் சமூகத்து தம்பதியின் மீது நிகழ்த்தப்பட்ட போலீஸ் வன்முறை, ஒடுக்கப்பட்ட அம்மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் துன்பங்கள், சாதிய பாகுபாடு, லாக் அப் மரணம், மனித உரிமை மீறல்கள், இவர்களின் சட்டப் போராட்டம் மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
மேலும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் , அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தது.
இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்...
“ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும் வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம்.நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும் அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” என ட்விட்டர் பக்கத்தில் சூர்யா பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது பதிவுடன் இருளர் சமூகத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது குறித்த தகவல்களையும் சூர்யா இணைத்துள்ளார்.
அதில் இருளர் சமூகத்து மக்களுக்கு 11,379 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன, 59ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்பன உள்ளிட்ட தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.