கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு முதல் கட்டமாக நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்க இருக்கிறார். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி நகரில் இருந்து 400க்கும் மேற்பட்டோரை விஜய் மக்கள் இயக்கத்தினர் திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றனர்.
தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தமிழக அரசு மீட்புப்பணிகளை துரிதமாக மேற்கொண்டது. தன்னார்வலர்களும் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினர்.
வடமாவட்டங்களில் பெய்த கனமழையை தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயல்பைவிட அதிக அளவு மழை பெய்ததது.
கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. வீடுகள் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பொது மக்கள் செய்வதறியாது நிலைகுலைந்து போயினர்.
இதனை அடுத்து அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். அந்த வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டவர்கள் இரவு பகலாக களத்தில் இறங்கி வெள்ள மீட்புப் பணிகளை மேற்கொண்டதோடு, நிவாரணம் வழங்கும் பணிகளையும் சிறப்பாகச் செய்தனர்.
தற்போது தென்மாவட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறனர். தொடர் விடுமுறையில் இருந்த பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளத்தில் பாதித்த பகுதி மக்களுக்கு, நெல்லை மாநகரில் வைத்து நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்க இருக்கிறார்.
முதல் கட்டமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்க இருக்கிறார். வாழ்வாதாரத்தை இழந்த பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் களத்தில் நின்று பல உதவிகளை செய்து வந்தாலும், கூடுதலாக ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை விஜய் வழங்க இருக்கிறார்.
நெல்லை மாவட்டம் கே டி சி நகரில் உள்ள மாதா மஹாலில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் வருகை தருகிறார். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி நகரில் இருந்து 400க்கும் மேற்பட்டோரை விஜய் மக்கள் இயக்கத்தினர் திருநெல்வேலிக்கு அழைத்துச்சென்றனர்.
தூத்துக்குடியில் இருந்து 27 வேன்கள் மூலம் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில், விஜய் மக்கள் இயக்க தென் மண்டல நிர்வாகிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.’