சென்னையில் பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கிய நடிகை ரஞ்சனா நாச்சியாரின் செயல் பாராட்டப்பட வேண்டியதே என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி (Narayanan Tirupati) கருத்து தெரிவித்து உள்ளார்.
சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகியும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தியுள்ளார்.
பின்னர் மாணவர்களை சரமாரியாகத் திட்டியுள்ளார். படியில் தொங்கியபடி பயணம் செய்ததைக் கண்டித்த அவர், மாணவர்களை இறக்கிவிட்டதோடு மட்டுமல்லாது அவர்களைத் தாக்கியும் உள்ளார். மேலும் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை ஒருமையில் பேசி சண்டை இழுத்துள்ளார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் நடிகை ரஞ்சனா மீது அரசுப் பேருந்து ஓட்டுநர் சரவணன் போலீஸில் புகார் அளித்ததன் அடிப்படையில் நடிகை ரஞ்சனா நாச்சியாரை காவல் துறையினர் இன்று (சனிக்கிழமை) காலை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து தந்து ட்விட்டர் பக்கத்தில் நாரயணன் திருப்பதி பதிவிட்டுள்ளதாவது..
இவருடைய வார்த்தைகள் தடித்தே இருந்தாலும் இவரின் பதை பதைப்பும், அக்கறையும் பாராட்டப்பட வேண்டியதே. ஒரு காவல்துறை அதிகாரியாக, தாயாக, சகோதரியாக, சமூக விழிப்புணர்வாளராக இவரின் கொதிப்பு நியாயமானதே. பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் தான் கண்டனத்திற்கு, தண்டனைக்கு உரியவர்கள் என்று குருப்பிட்டுள்ளார்.