தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ‘பொதுமக்களின் வாக்கு யாருக்கு? என பல்வேறு விதமான கருத்துக் கணிப்புகள் தற்போது உலா வரத் துவங்கியுள்ளன.
இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், அந்தந்த மக்களவை தொகுதிகளில் வெல்லப் போவது எந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்? எந்த கட்சி அதிகமான தொகுதிகளில் வெல்லும்? மத்தியில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? போன்ற கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

இது தொடர்பாக பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் தமிழக தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை வெளிவந்த பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணியே பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளன. சில கணிப்புகளில், ஒரிரு இடங்களில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்துள்ளன. தமிழ்நாட்டின் பிரபல செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்ட கருத்துக் கணிப்பில் திமுகவே அனைத்து இடங்களிலும் வெல்லும் எனவும், அதிமுக மற்றும் பாஜகவின் வாக்கு சதவீதம் உயரும் என்றும் கூறியுள்ளது. அதேநேரம் கடந்த முறையைவிட இந்த முறை சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சதவீதம் பல இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு இருக்கும் எனவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெற வாய்ப்பில்லை என வெளிவந்த கருத்துக் கணிப்புகள் திமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அதிமுகவினர் மற்றும் பாஜகவினரை அது மன வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களை இன்று சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “சில ஊடங்கங்கள் பொய்யான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன. அது கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு. பிரதமர் அடிக்கடி தமிழகம் வந்து செல்வதால் எந்த பயனும் இல்லை. அவரும், மத்திய அமைச்சர்களும் தமிழகத்திற்கு வரும்போது ஏதாவது ஒரு திட்டத்தை துவக்கி வைத்து சென்றிருந்தால், ஏதாவது பயன் கிடைத்திருக்கும். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் அதிகமான நிதி பெற்றிருக்கிறது. திமுக 650 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் பெற்று இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளே எடபாடி பழனிச்சாமியின் டென்சனுக்கு காரணமாகவும் கூறப்படுகிறது.