பிரதமர் நரேந்திர மோடி(pm modi) தனது முதல் அரசு பயணமாக ஜூன் 21ஆம் தேதி அமெரிக்கா சென்றுள்ளார். அவரது விமானம் நியூயார்க்கில் உள்ள ஜான் எப்.கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதனையடுத்து நியூயார்க்கிற்கான தனது பயணத்தின் போது, அவர் தலைமை நிர்வாக அதிகாரிகள், நோபல் பரிசு பெற்றவர்கள்,பொருளாதார வல்லுநர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணர்களை சந்தித்து பேசினார்.
பிறகு நியூயார்க் சென்ற பிரதமர் நரேந்திர மோடி எலான் மஸ்க் சந்திப்பின் போது, எரிசக்தி முதல் ஆன்மீகம் வரை பல தரப்பட்ட விவகாரம் குறித்து உரையாடல்கள் நடந்ததாக தகவல் வெளியானது.இதனையடுத்து பிரதமர் மோடி எலான் மஸ்க்கை இந்தியா வர அழைப்பு விடுத்தார்.
பின்னர் பேட்டி அளித்த எலான் மஸ்க், பிரதமர் மோடிக்கு தான் ரசிகனாகி இருப்பதாக குறிப்பிட்டார். இந்தியாவுக்கு சாதகமான விஷயங்களைச் செய்ய பிரதமர் விரும்புவதாக கூறிய அவர், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் அதே வேளையில், அதன் மூலம் இந்தியாவுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
உலகின் வேறு எந்த பெரிய நாடுகளையும் விட இந்தியாவில் முதலீட்டுக்கு சாதகமான சூழல் இருப்பதாக அவர் கூறினார். ஸ்டார்லிங்க் இணைய தள நிறுவனத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும், அதன் மூலம் இணைய தள சேவைகள் கிடைக்காத பகுதிகளும் பலன் பெறும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார்.