சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொன்முடி வகித்து வந்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006- 2011 திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும்
அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் அவருக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், எம்.எல்.ஏ.வாக நீடிக்கும் தகுதியை பொன்முடி இழந்துள்ளார்.
மேலும், இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மேல்முறையீட்டிற்காக அவகாசம் கோரப்பட்ட நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மேல்முறையீடு செய்வதற்காக தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொன்முடியின் எம்.எல்.ஏ பதவி காலியாக உள்ளது. இதனால், பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பன் தற்போது பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை அமைச்சராக உள்ளார்.