சென்னை பனையூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு 100 அடி உயரம் கொண்ட பா.ஜ.க. கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட இருந்தது. அனுமதியின்றி அக்கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் அந்த கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக ஜே.சி.பி. வாகனம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் ஜே.சி.பி. வாகனத்தை சேதப்படுத்த முயன்றனர்.
இந்த சம்பவத்தில் ஏற்கனவே பா.ஜ.க.வினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் 6 வது நபராக தலைமறைவாக இருந்து வந்த அமர் பிரசாத் ரெட்டி கடந்த அக்.22 ஆம் தேதி கைது செய்யபட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்த நிலையில்,தென்காசி மாவட்டத்தில் “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரை நடந்தபோது அமர்பிரசாத் ரெட்டி போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆழ்வார்குறிச்சி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னையில் இருந்து பேருந்து மூலமாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி அழைத்துச் செல்லப்பட்டார்.