இந்தியாவின் இளம் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி காரை, பரிசாக அளிக்க விரும்புவதாக பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழும தலைவருமான ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
அசர்பைஜான் நாட்டின் பாகு நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா கலந்து கொண்டார். இதன் இறுதிப் போட்டிக்கு, நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனும் பிரக்ஞானந்தாவும் தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்ட தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, கடைசி வரை போராடி டை பிரேக்கர் சுற்றில் தோல்வியடைந்தார்.
எனினும்18 வயது ஆன பிரக்ஞானந்தா இறுதிப் போட்டி வரை வந்து சாதித்திருப்பது இந்தியாவுக்கு பெருமையான விஷயம்தான். அதிலும் தமிழகத்திற்கு பெரும் பெருமையை சேர்த்துவிட்டார்.
இறுதிப்போட்டி வரை முன்னேறி 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எம். பி ராகுல் காந்தி உள்பட பல்வேறு துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது பிரக்ஞானந்தாவுக்கு காரை பரிசளிக்கலாமே என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ் யூவி 400 இ.வி. காரை பரிசாக அளிக்கவுள்ளதாக ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X பதிவில் உங்கள் உணர்வைப் பாராட்டுகிறேன். பிரக்ஞானந்தாவுக்கு 1 கோடிக்கும் அதிகமான டிவிட்டர் பயனர்கள், மஹிந்திராவின் தார் காரை பரிசாக அளிக்க கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், ஆனால் எனக்கு இன்னொரு யோசனை இருக்கிறது.
கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் விருப்பத்திற்கு துணை நின்ற அவரின் பெற்றோர் நாகலட்சிமி, ரமேஷ்பாபு ஆகிய இருவருக்கும் XUV4OO EV காரை பரிசளிக்கலாம் என நினைக்கிறேன் என்று கூறி உள்ளார்.
மேலும் குழந்தைகளுக்கு வீடியோ கேம்களை கொடுக்காமல் மூளைக்கு வேலை கொடுக்கும் செஸ் போன்ற விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தும் பெற்றோர்களை ஊக்குவிவிக்க விரும்புகிறேன் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
இந்த காரின் விலை 15 லட்சத்திலிருந்து 19 லட்சம் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.