சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் காய்-கனி சந்தையை முழுமையாகவோ, பகுதியாகவோ திருமழிசைக்கு மாற்றி விட்டு, சந்தையை வணிகமையமாக மாற்றுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றுவது எந்த வகையிலும் சிறந்தத் திட்டம் இல்லை. கொரோனா காலத்தின் போது கோயம்பேடு சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டது. அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததாலும், போதிய அளவில் வணிகம் நடைபெறாததாலும் தினமும் 2 லட்சம் கிலோ காய்கறிகள் வீணாயின.

அதனால், வணிகர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. திருமழிசையில் இப்போது கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும் கூட, கோயம்பேடு அளவுக்கு வணிகம் நடக்க வாய்ப்பில்லை. சென்னை மாநகரில் உள்ள 70 லட்சம் மக்களுக்கு கோயம்பேட்டில் இருந்து காய்கறிகளை வினியோகிப்பது தான் எளிதானதும், செலவு குறைந்ததும் ஆகும்.
திருமழிசையில் சந்தை அமைக்கப்பட்டு, அங்கிருந்து சென்னை மாநகருக்கு காய்கறிகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றால் அதற்கு அதிக செலவு ஆகும். அதனால், சென்னை மக்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும்.

கோயம்பேடு சந்தையை மூடுவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கூறியிருக்கும் காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கோயம்பேடு சந்தையை பராமரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.11.70 கோடி செலவு ஆவதாகவும், அதிலிருந்து ரூ.12 கோடி மட்டுமே வருவாய் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ள சி.எம்.டி.ஏ அதிகாரிகள், ஆண்டுக்கு ரூ.30 லட்சம் மட்டுமே லாபம் கிடைக்கும் இந்த சந்தையை நிர்வகிக்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த பார்வை மிகவும் தவறானது. கோயம்பேடு சந்தை மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பார்க்கக் கூடாது; மாறாக, சென்னை மாநகர மக்களுக்கு குறைந்த விலையில் காய்-கனிகள் கிடைக்கவும், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கவும் கோயம்பேடு சந்தை காரணமாக இருக்கிறது. அதைத் தான் அரசு பார்க்க வேண்டும். கோயம்பேடு சந்தை என்பது அரசைப் பொறுத்தவரை வணிகம் அல்ல..சேவை என்பதை சி.எம்.டி.ஏ உணர வேண்டும்.

எனவே, வணிகர்கள், தொழிலாளர்கள், சென்னை மாநகர மக்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை சி.எம்.டி.ஏ கைவிட வேண்டும். வணிக மையம் அமைக்கும் திட்டத்தை சென்னையின் வேறு பகுதிகளில் செயல்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்