தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு வழங்கிய நிதி ரூபாய் 1,003 கோடியில் திமுக அதிலும் ஊழல் செய்திருக்கிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று மாலை ”என் மண் என் மக்கள் பயணம், அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது மக்களிடையே பேசுகையில்..ஆயிரம் ஆண்டுகள் தெற்காசிய வரலாற்றைத் தீர்மானித்த மண். கங்கையும் கடாரமும் கொண்ட சோழ மண். சனாதன தர்மம் செழித்த மண்.
அவர்கள் வீட்டிலேயே ஆரம்பித்து அவர்கள் வீட்டிலேயே முடிவதுதான் திமுகவினரைப் பொறுத்தவரை சரித்திரம். ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் தஞ்சை பெரிய கோவில், தமிழர்களின் திறமைக்குச் சான்று. ஆனால் இன்று, திமுகவினர் கட்டும் பாலங்கள், சாலைகள் ஒரு மழைக்குக் கூட தாங்குவதில்லை. அந்த அளவுக்கு ஊழல் நடைபெறுகிறது. எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் என்ற நிலை இருக்கிறது. தஞ்சாவூர் மண்ணில் இருந்து திமுக தடயமில்லாமல் துரத்தப்பட வேண்டும்.
தஞ்சை மண்ணுக்குச் சோழர்கள் கொடுத்த அதே மரியாதையை, பாரதப் பிரதமர் அவர்களும் கொடுத்திருக்கிறார். G20 உச்சி மாநாடு நடந்த பாரத மண்டப வளாகத்தில் தஞ்சை சுவாமி மலையில் இருந்து செய்யப்பட்ட உயரமான நடராஜர் சிலையை, உலக நாடுகளின் தலைவர்கள் பார்க்கும் வண்ணம் அமைத்து தஞ்சை மண்ணின் திறமையை உலகறியச் செய்தார். மேலும் பாரத மண்டபத்தின் உள்ளே, தஞ்சை ஓவிய மண்டபம் அமைத்து, உலக நாடுகளின் தலைவர்களுக்கு தஞ்சாவூர் ஓவியத்தின் புகழைக் கொண்டு சென்றிருக்கிறார்.
மேலும், பிரதமர் மோடி அவர்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைக் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிறகு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் விற்பனை 240% அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பட்டி தொட்டியெங்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை சென்று சேர்ந்திருக்கிறது. மேலும் தஞ்சாவூர் நெட்டிக்கும், தட்டைக்கும் புவிசார் குறியீடு வழங்கிப் பெருமைப்படுத்தியிருக்கிறது.
இதன் மூலம், ஏற்றுமதி வாய்ப்பு பெருகும். தஞ்சாவூர் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்றிருக்கிறார் நமது பிரதமர். மேலும், புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில், சோழப் பேரரசின் செங்கோலை பாராளுமன்ற மையக் கட்டிடத்தில் வைத்து அலங்கரித்திருக்கிறார். தேவாரமும் திருவாசகமும் பாடி செங்கோல் நிறுவப்பட்டது. நமது பிரதமர் இந்தியைத் திணிக்கிறார் என்று பொய்க் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
ஆனால், நாடு முழுவதும் தமிழின் பெருமையைக் கொண்டு சென்று, தமிழைத் திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்தால்தான் பொருத்தமாக இருக்கும். உண்மையான தமிழினத் தலைவர் மோடி தான் என்று தெரிவித்தார் .
தொடர்ந்து பேசிய அவர், காவிரித் தாய் ஆசியுடன், ஒரு ஏக்கர் நிலத்தில், 4.2 மெட்ரிக் டன் நெல் விளையும் பூமி தஞ்சாவூர். ஆனால் தற்போது, நம் கண் முன்னே வயல் எல்லாம் தரிசாக மாறிக்கொண்டிருக்கிறது. 1974 ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் சுயநலத்துக்காக தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்த திமுக, அதன் பின்னர் காவிரியின் நடுவே 5 அணைகள் கட்ட கர்நாடக மாநிலத்தை அனுமதித்தது திமுக. 2007 ஆம் ஆண்டு 12 திமுக மத்திய அமைச்சர்கள் இருந்தும், கூட்டணிக் கட்சி காங்கிரஸுக்காக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அரசு அறிவிப்பாக வெளியிடவில்லை.
பிரதமர் அவர்கள் வந்த பிறகுதான் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. கர்நாடகாவில் கடந்த ஐந்து ஆண்டுகள் பாஜக ஆட்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் காவிரியில் தண்ணீர் வந்தது. ஆனால், கர்நாடகாவில் திமுக கூட்டணிக் கட்சி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் காவிரியின் தண்ணீர் விட மறுத்தது. டெல்டா பகுதி நிலங்கள் தரிசாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், குறைந்தபட்சம், கர்நாடக அரசுக்குக் கண்டனம் கூடத் தெரிவிக்க தைரியம் இல்லாமல் இருக்கிறார். திமுகவினர், தேர்தல் வாக்குகளுக்காக போராடுவது போல நடிக்க வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசுகின்றனர்.
மேலும் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில், டெல்டா பகுதியில் மீத்தேன், நிலக்கரி எடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட திமுகவினரே, பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பிறகு தற்போது அதை எதிர்ப்பது போல் நடிக்கிறார்கள். தமிழக மக்கள் மற்றும் பாஜகவினர் வேண்டுகோளுக்கு இணங்க, நமது மத்திய அரசு நிலக்கரி எடுப்பதை ரத்து செய்திருக்கிறது. பாஜக என்றும் விவசாயிகள் பக்கம் நிற்கும்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்லியிருக்கிறார். ஆனால், தஞ்சாவூருக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, நெல், வாழைக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு, தேங்காய் எண்ணெய், கொப்பரை கொள்முதல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை 4,000 ரூபாய், இயற்கை விவசாய மையம், மரவள்ளிக் கிழங்கு ஆலை, மனோரா சுற்றுலாத் தலம், தஞ்சாவூர் கைவினைப் பொருள்களுக்கான கிராமம், ராஜராஜ சோழ மன்னருக்கு உடையாளூரில் நினைவு மண்டபம் என ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை என்று கூறினார்.
பிரதமர் தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு வழங்கிய நிதி ரூபாய் 1,003 கோடி. ஆனால் திமுக அதிலும் ஊழல் செய்திருக்கிறது. அதில் 827 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக திமுக கூறுகிறது. தமிழக பாஜக கோரிக்கையை ஏற்று, உதான் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானங்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. ஆனால், திமுகவினர் அதில் ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டுவார்கள். பிரதமரின் வீடு திட்டத்தில் 53,577 வீடுகள், 3,81,295 வீடுகளுக்கு குழாயில் குடிநீர், 2,46,421 இலவசக் கழிப்பறைகள், 1,19,869 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பிரதமரின் மருத்துவக் காப்பீடு 1,55,312 பேருக்கு, 1,19,233 விவசாயிகளுக்கு, வருடம் ரூபாய் 6,000, முத்ரா கடன் உதவி 5,208 கோடி ரூபாய் என நலத் திட்டங்கள் ஏராளம்.
திமுக ஆட்சியில் தமிழகம் அதளபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம் மண்ணும் மக்களும் நன்றாக இருக்க வேண்டுமானால், நம்முடைய மண்ணையும் மக்களையும் மதிக்கும் மக்கள் பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகம் 1967ல் செய்த வரலாற்றுப் பிழையை சரி செய்ய ஒரு வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி புறக்கணிக்கப்பட வேண்டும். செங்கோல் சாட்சியாக ஆட்சி செய்யும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.