சிக்கிம் மாநிலத்தில் வரும் 15-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் வடக்கு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் லாச்சென் பள்ளத்தாக்கில் நேற்று அதிகாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. லோனக் ஏரி அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த மேகவெடிப்பால் பல மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் முக்கிய ஆறுகள் நிரம்பி வழிந்தது.
5 நிமிடங்களுக்குள் மிகப் பெரிய அளவுக்கு மழை பெய்ததால் அங்குள்ள தீஸ்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் கேங்டாக், மங்கன், பாக்கியாங், நாம்சி ஆகிய 4 மாவட்டங்களில் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தியது. மேலும், மாநிலத்தில் 10ற்கும் மேற்பட்ட பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து முடங்கி உள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி 14 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காணாமல் போய் உள்ளனர்.
வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.
சிக்கிம் மாநிலத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், வரும் 15-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.