TTV Dhinakaran wife campaign பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, அவரது மனைவி அனுராதா தினகரன், இன்று முதல் முறையாக பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில், தேர்தல் களத்தில் திமுக ,அதிமுக ,காங்கிரஸ் ,பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், தேனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அதற்காக தனது கணவர் டிடிவி தினகரனை ஆதரித்து, முதல் முறையாக அவரது மனைவி அனுராதா தினகரன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
திம்மிநாயக்கன்பட்டியில் இன்று தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கிய டிடிவி தினகரனின் மனைவி அனுராதா தினகரன், குக்கர் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அனுராதா தினகரன், “எனது கணவருக்காக உங்களிடம் பேச வந்திருக்கிறேன், முதல் முறையாக திம்மிநாயக்கன்பட்டியில் உங்களுடன் பேசுகிறேன்” எனக் கூறி மக்களிடம் வாக்கு சேகரித்துள்ளார்.
முதல் முறையாக தனது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, அவரது மனைவி அனுராதா தினகரன்,பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.தற்பொழுது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.