எலான் மஸ்க் டுவிட்டரின் நீல குருவி லோகோவை மாற்றி ‘X’ என மாற்றுவதாக அறிவித்துள்ளார்.
உலகப் பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். ட்விட்டரின் சிஇஒ-வாக பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தது, பயனாளர்கள் தங்கள் டுவிட்டர் கணக்குகளை அதிகாரப்பூர்வமானதாக மாற்றுவதற்குக் கட்டணம் உட்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வந்தார்.
ட்விட்டர் நிறுவனத்தின் வருவாயை பெருக்கும் நடவடிக்கையாக இந்த முடிவை எடுத்ததாக எலான் மஸ்க் விளக்கம் அளித்தார்.
அதனை தொடர்ந்து, முன்னறிவிப்பின்றி கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரின் லோகோ நீலக் குருவிக்கு பதிலாக டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படம் லோகோவாக மாற்றப்பட்டது. பின் மீண்டும் நீல குருவி லோகோவாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், நேற்று அதிரடியாக டுவிட்டரின் நீல நிற குருவி லோகோவை மாற்ற இருப்பதாக அறிவித்தார். அதன்படி, ட்விட்டரை ரீ பிராண்ட் செய்யும் வகையில் இன்று ட்விட்டரின் தனித்துவமான லோகோவான நீல குருவிக்கு பதிலாக எலான் மஸ்க் அதன் லோகோவை ‘X’ என மாற்றுவதாக அறிவித்து இந்த லோகோவை வெளியிட்டுள்ளார்.
இந்த லோகோ மாற்றத்தை ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாசினோவும் உறுதிப்படுத்தினார். மேலும், ஆடியோ, வீடியோ, மெசேஜிங், பணம் செலுத்துதல் மற்றும் பேக்கிங் போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.