கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சாமியின் பக்தர்கள் நாடு முழுவதும் இன்று மாலை அணிந்து தங்களுடைய மண்டல பூஜைகளுக்கான விரதம் மேற்கொள்ள உள்ளனர்.
குறிப்பாக முதல் முறையாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் அன்று அதிகாலை எழுந்து குளித்து ஆலயத்தில் குரு மார்கள் மூலமாக துளசிமணி மாலை அணிந்து தங்களுடைய விரதத்தை துவக்குகின்றனர்.
அவ்வாறு முதல் முறையாக மாலை அணிபவர்களை கண்ணி சாமி என்று அழைப்பது வழக்கம். மேலும் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் பலமுறை சபரிமலை சென்று திரும்பி இருந்தாலும் கார்த்திகை முதல் நாளன்று மாலை அணிந்து மண்டல பூஜைகளின் கடைசி பூஜையான படி பூஜை நடைபெற உள்ள கால இடைவெளியான இரண்டு மண்டலங்கள் நோன்பிருந்து சபரிமலை செல்வது வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.
அவர்களும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு மாலை அணிந்து தங்களுடைய நோன்பை துவக்கினார்கள் இதற்காக கோவை சித்தாபுதூர் ஐயப்பன் ஆலயத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.