அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உயிரிழந்ததாக கருதப்பட்ட குழந்தை திடீரென உயிர்த்தெழுந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
அசாம் மாநிலத்தில் சில்சார் என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை ஒன்று பிறந்தவுடன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்யும் பொழுது குழந்தை மீண்டும் உயிருடன் எழுந்து வந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநிலத்தில் ரத்தன் தாஸ் என்பவரின் மனைவி ஆறு மாத கர்ப்பமாக இருந்த நிலையில், அவரது மனைவியை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அப்போது அவருடைய மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் இவரின் கர்ப்பத்தில் ஒரு சில சிக்கல்கள் இருக்கிறது என்றும், இதனால் குழந்தை அல்லது தாய் யாரேனும் ஒருவரை தான் காப்பாற்ற முடியும் என்றும் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து தனது மனைவியின் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று ரத்தன் தாஸ் கூறியவுடன் அவரின் ஒப்புதலுடன் மருத்துவர்கள் குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். அதன் பின்னர், குழந்தையை ரத்தன் தாஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
குழந்தையின் உடலையும், குழந்தையின் இறப்பு சான்றிதழையும் பெற்றுக் கொண்ட ரத்தன் தாஸ் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அதன் பின்னர், குழந்தைக்கு முறைப்படி ஈமச்சடங்கு செய்ய வேண்டும் என்று அங்கிருந்த இடுகாட்டிற்கு குழந்தையின் உடலை கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது குழந்தையை புதைப்பதற்காக சென்றபோது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தையின் கை கால்கள் அசைந்து உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்து அங்கு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.