உலகெங்கும் இருக்கும் இஸ்லாமிய மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை . ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும் .
பக்ரீத் அன்று இஸ்லாமியர்கள் சிறப்பு பிராத்தனை செய்து அல்லாவை வழிபட்டு புத்தாடை அணிந்து குர்பானி கொடுப்பது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டுக்கான பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை 29-06-2023 தேதி அன்று கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது அயூப் சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஜூன் 28ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06052), சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு மறுநாள்(ஜூன் 29) காலை 11.45 மணிக்கு வந்து சேரும்.
மறுமார்க்கம் ஜூன் 29ஆம் தேதி (வியாழக்கிழமை) மதியம் 3 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06051), சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் (ஜூன் 30) அதிகாலை 3.45 மணிக்கு வந்தடையும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (ஜூன் 27) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது .