ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்களான முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வர் தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தனிப்படையின் ஒரு பிரிவினர் பெங்களூரு விரைந்துள்ளனர்.
சென்னையிலும் மதுரையிலும் தனிப்படைகள் முகாமிட்டு அவரை தேடி வரும் நிலையில் தேவைப்பட்டால் கேரளா விரைந்து செல்லவும் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.