பீகாரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் மாவட்ட கலெக்டர் மற்றும் மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாக முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில், 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு எதிர்பாராத விதமாக பாக்மதி நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இன்று காலை 10 மணியளவில் பள்ளி குழந்தைகள் மற்றும் பிற நபர்களை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆற்றின் நீரோட்டம் திடீரென வலுப்பெற்றதால் படகு கட்டுப்பாட்டை இழந்து மூழ்கத் தொடங்கியது.
சிறிது நேரத்தில் படகில் தண்ணீர் நிரம்பி படகு கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த குழந்தைகளும் மற்றவர்களும் நீரில் மூழ்கினர். இந்நிலையில், இந்த விபத்து குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் 20 மாணவர்களை மீட்டனர்.
மேலும், மற்ற மாணவர்களையும் மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீரில் மூழ்கிய மற்ற மாணவர்களின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை.
இதுபற்றி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், மாவட்ட கலெக்டர் மற்றும் மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தை அவசரமாக கவனிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.