பீகார் மாநிலத்தில், கழிவுநீரில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் மிதந்த நிலையில், அதனை சாக்கடைக்குள் (canal) குதித்து பொதுமக்கள் அள்ளிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தில், பாட்னா அருகே உள்ள சசாராம் என்ற பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அடியில் ஓடிய சாக்கடை (canal) கழிவுநீரில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. இதனை அறிந்து அப்பகுதியில் கூடிய மக்கள் கழிவுநீரில் மிதந்த ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்காக சாக்கடைக்குள் இறங்கினர்.
அதையடுத்து, சற்றும் முகம் சுளிக்காமல் சாக்கடைக்குள் இறங்கிய பொதுமக்கள் 2000, 500, 100 ரூபாய் நோட்டுகளை சாக்கடை கழிவுநீரில் இருந்து அள்ளிச்சென்றனர். இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், சாக்கடையிலிருந்து அள்ளிச்சென்ற பணம் போலியான தாள்கள் என்று ஒரு சிலர் கூறினர். ஆனால், பணத்தை கொண்டு சென்ற சிலர் அவை உண்மையான ரூபாய் நோட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சாக்கடை கழிவுநீரில் இருந்து பொதுமக்கள் பணத்தை அள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.