தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை “திமுக பைல்ஸ் 2” என்ற பெயரில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திமுக பைல்ஸ் என்ற தலைப்பில் ஏற்கனவே திமுக தலைவர்கள், அமைச்சர்கள் சொத்துப்பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது பெரிதும் பூதாகரமான நிலையில் தற்போது “DMK FILES 2” என்ற இரண்டாவது சொத்து தொடர்பான ஆவணங்களை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அளித்த பிறகு, தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை கவர்னரிடம் வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
அதன் பிறகு, ‘திமுக பைல்ஸ் 2’ என்ற பெயரில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
அந்த வீடியோவில், எல்நெட் டெக்னாலஜிஸ் நிறுவனம் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் கருவிகள் வாங்கியதில் 2000 கோடி ஊழல், வருமான வரி ஏய்ப்பு, பினாமி நிறுவனங்கள் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து வினியோகத்தில் 600 கோடி ரூபாய் என மொத்தம் 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.