சி ஏ ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள முறைகேடுகளால் மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய உயர்கல்வி துறை அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலகுவாரா?என நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார்.
இலவச சிம்கார்டுகள் வழங்கும் திட்டம்:
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் போது நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அப்போது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் இணைய வழியில் கல்வி பயில்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 4 ஜி டேட்டா உடன் கூடிய சிம் கார்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
அதற்காக வாங்கப்பட்ட ஒன்பது லட்சம் சிம் கார்டுகளில் 1,10,846 சிம் கார்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளதாக தணிக்கைத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்..
கல்லூரி மாணவர்களின் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சி ஏ ஜி அறிக்கை தமிழக அரசின் முறைகேடுகளை அமபலப்படுத்தியுள்ளது. இலவச சிம்கார்டுகள் வழங்கும் திட்டத்தில் 1.11 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது அந்த அறிக்கை. அதன் வகையில் 4.93 கோடி ரூபாயை தேவையில்லாமல் செலவழித்துள்ளது மாநில அரசு. மேலும், மாணவர்களிடமிருந்து சேகரித்த தனிப்பட்ட தகவல்களை கொண்டு வாங்கிய சிம்கார்டுகளை வேறு யாரோ பயன்படுத்தி வருவதாக மத்திய தணிக்கை துறை குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இது மாபெரும் குற்றச்செயல். சட்டவிரோதமாக இந்த சிம்கார்டுகள் செயல்படுத்தப்பட்டால், அந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆகவே, இந்த சட்ட விரோத செயலை செய்தவர்களை விசாரணைக்கு உட்படுத்தி அவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும். உடன் பணியிலிருந்து நீக்க வேண்டும்.
சட்ட விரோதமாக செயல்பட்ட குற்றத்திற்காக அவர்களை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். உடன் அந்த சிம்கார்டுகளை பயனற்றதாக்க வேண்டும். சி ஏ ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள இந்த முறைகேடானது தி மு க அரசு வெட்கித்தலைகுனிய வேண்டிய விவகாரம். அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதோடு மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய இந்த முறைகேட்டுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலகுவாரா?என்று கேள்வியெழுப்பியுள்ளார்.