PMK Alliance with BJP : பாராளுமன்ற தேர்தல் 19.04.2024 அன்று நடக்கவுள்ள நிலையில், “அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸும்,
“பாஜகவுடன் கூட்டணி வைப்பதே நல்லது” என அன்புமணியும் இரு வேறு துருவங்களாக இருப்பதால், யாருடன் கூட்டணி? என்பதில் பாமகவில் இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படாமலேயே இருக்கிறது.
அதே நேரத்தில், அடுத்த வாரம் பிரதமர் கலந்து கொள்ளும் சேலம் பொதுக்கூட்டத்தில் அன்புமணியை கலந்து கொள்ளச் செய்வதற்காக கூட்டணி அழுத்ததை பாஜக பலமாக தருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
தனது தோழமைக் கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ள திமுக இந்த பாராளுமன்ற தேர்தலில் 21 இடங்களில் நேரடியாக போட்டி இடுவதற்கு முடிவு செய்து விட்டு தனது கூட்டணி கதவுகளை இழுத்து மூடி விட்டது.
ஆனால், அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் ஓரளவு வாக்கு வங்கியை வைத்துள்ள தேமுதிக மற்றும் பாமக ஆகிவற்றை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பகீர பிரயத்தனம் செய்து வருகின்றன.
அதிமுக தரப்பில், முன்னால் அமைச்சரும் தற்போதைய எம்.பி.யுமான சி.வி.சண்முகம் தைலாபுரம் தோட்டத்திற்கே 2 முறை நேரில் சென்று கூட்டணி குறித்துப் பேசினார்.
அப்போது அதிமுக தரப்பிடம், “ஏற்கனவே தந்தது போல 7 மக்களவை தொகுதியும் 1 ராஜ்யசபா தொகுதியும் தர வேண்டும்” என பாமக தரப்பு கேட்டதாகவும், அதற்கு, 5+1 என்ற கணக்கிற்கு அதிமுக தயாராக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இருந்தாலும், அடுத்து வரவிருக்கும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அதிமுகவோடு கூட்டணி அமைப்பதில் அதிக ஈடுபாடு காட்டினார் பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ்.
அதே போல பாமக தலைவர் ஜிகே மணியும், “ அதிமுகவோடு கூட்டணி அமைத்தால் மட்டுமே பாமகவின் எதிர்கால அரசியலுக்கு அது சரியாக இருக்கும்” என்ற கருத்தில் உறுதியாக இருந்தார்.
அப்படி இருந்தும், அதிமுக – பாமக கூட்டணி பேச்சு வார்த்தை தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததற்கு அன்புமணி தான் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.
அதாவது, வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக நிச்சயம் மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்ற தகவல்கள் உறுதியாக வந்து கொண்டிருக்கும் நிலையில்,
‘இந்த தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்தால், போட்டியிடும் தொகுதிகளில் ஜெயிக்கிறோமோ இல்லையோ, கட்டாயம் ஒரு ராஜ்யசபா சீட்டு, மத்திய மந்திரி பதவியும் வாங்கி விடலா’ம் என்பதால், பாஜகவோடுதான் கூட்டணி என்பதில் படு கறார் காட்டுகிறாராம் அன்புமணி.
இதற்காக, டெல்லி வரை நேரில் சென்று பாஜக மேலிட பொறுப்பாளர்களையும் அவர் சந்தித்து பேசி வந்த்தாகவும், அதன் பின்னர் வி.கே சிங், கிஷன் ரெட்டி ஆகிய பாஜக தலைவர்களை சென்னை டி. நகரில் உள்ள தனது சகோதரி வீட்டில் வைத்து அன்புமணி சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், அன்புமணியின் முடிவிற்கு பிடி கொடுக்காமலேயே இருந்தார் ராமதாஸ். இதனால் தந்தை, மகன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இருந்தே, “தமிழகம் மட்டுமல்லாமல் தென் மாநிலங்கள் முழுக்கவே மோடிக்கு எதிரான அலை நிலவுகிறது. இதனால், பாஜவுடன் கூட்டணி வேண்டாம்” என அன்புமணியிடம் கூறி வந்தார் ராமதாஸ்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் கணிசமான வாக்குகள் பெறவோ, டெபாசிட் பெறவோ வாய்ப்பு உள்ளது . தவிர, அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் கடந்த முறையை விட அதிகமான சீட்டுகளை வாங்கி கனிசமான இடங்களில் வெற்றி பெறலாம்.
ஆனால், பாஜவுடன் கூட்டணி வைத்தால் வருங்காலத்தில் கட்சியை நடத்த முடியாது. கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்துவிடும்” என கூறினாராம் ராமதாஸ்
ஆனால் அன்புமணியோ, “அடுத்த ஆட்சியும் பாஜகதான் என வெளியாகும்” தகவல்களால் கவரப்பட்டு ஆரம்பத்தில் இருந்தே பாஜவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற மனநிலையில் இருந்து வருகிறாராம்.
அப்படி வந்தால் எப்படியாவது மந்திரி பதவி வாங்கி விடலாம் என அவர் கனவு காண்கிறாராம். மகனை எதிர்த்து ராமதாசால் ஒன்றும் செய்ய முடியாத சூழல் உள்ளது. மகனின் முடிவால் அப்செட்டில் இருந்த ராமதாஸ் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்பட யாரையும் சந்திக்ககாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் தான், பாஜவுடன் பாமக கூட்டணி (PMK Alliance with BJP) வைப்பது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் நேற்று (16.03.2024) காலை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் ராமதாஸ்.
ஆனால் பாஜவுடன் கூட்டணி வைக்க பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூட்டம் கூடுவதற்கு முன்பே நடக்கப் போவது குறித்து அறிந்து கொண்ட ராமதாஸ், தேதியே குறிப்பிடாமல் அக்கூட்டத்தை தள்ளி வைத்தார்.
இப்படி, அதிமுகவுடன் தான் கூட்டணி என கட்சி நிர்வாகிகள் பலரும் ராமதாஸை வலியுறுத்தி வரும் நிலையில்தான் அதிமுக தரப்பில் இன்று மீண்டும் ராமதாஸை சந்தித்து பேசி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தரப்பில், சி வி சண்முகம் மீண்டும் ராமதாஸை அவரது தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசி இருக்கிறார்.
அப்போது, ஏற்கனவே கூறியது போல அல்லாமல், பாமக ஏற்கனவே கேட்டபடி வட மாவட்டங்களில் 6 பாராளுமன்ற தொகுதிகளையும், தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியையும் தருவதற்கு அதிமுக தயாராக இருப்பதாகவும்,
தவிர, 1 ராஜ்ய சபா தொகுதியையும் பாமகவுக்கு ஒதுக்க தயாராக இருப்பதாகவும் ராமதாஸிடம் தெரிவித்தாராம் சி.வி.சண்முகம்.
இதனால், அதிமுக – பாமக கூட்டணி உருவாகும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக கூறப்படும் நிலையில்தான், பாஜக தனது பிரம்மாஸ்திர வியூகங்களை பாமக மீது செலுத்தி வருவதாகவும், தகவல்கள் கூறுகின்றன.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அன்புமணியிடம் பேசிய போது 7 பாராளுமன்ற தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை தொகுதிக்கு மட்டும் உறுதி அளித்திருந்த பாஜக தரப்பு,
மத்திய மந்திரி சபையில் இடம் ஒதுக்க மறுத்ததாகவும், அதற்கு பதிலாக ஏதாவது ஒரு வாரியத் தலைவர் பதவி தர தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், 18ஆம் தேதி கோவையில் தனது நிகழ்ச்சிகளை முடித்து விட்டு 19ஆம் தேதி சேலத்தில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதால், அந்த பொதுக்கூட்ட மேடையில் கூட்டணிக் கட்சி தலைவர்களையும் மேடையேற்ற நினைக்கிறது பாஜக.
எனவே, அதற்குள் பாமகவுடன் டீலை முடிக்க (PMK Alliance with BJP) தயாராகி வரும் பாஜக, அன்புமணி மூலமாக பாமக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும்,
அதற்கு, ராமதாஸ், ஜிகே மணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் யாரும் இன்னும் உடன்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கிறது தைலாபுரம் வட்டாரம்,.
மேலும், “அன்புமணி கடந்த 2004 ஆட்சிக் காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மருத்துவக் கல்லூரிகளுக்கு முறையற்ற வகையில் அனுமதி அளித்ததாக சிபி ஐ ஒரு வழக்கு பதிவு செய்தது.
அவ்வழக்கானது இன்று வரை நிலுவையிலிருக்கும் நிலையில், அதை காரணம் காட்டி அன்புமணிக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறதோ? என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது” என பட்டும் படாமலும் தகவல் தருகிறது தைலாபுரம் வட்டாரம்.