உத்தரபிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றில் 14 சிறுவர்களுக்கு இரத்தம் ஏற்றப்பட்ட நிலையில், அந்த சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் பி, சி மற்றும் எச்ஐவி போன்ற நோய்த்தொற்றுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் செயல்பட்டு வரும் லாலா லஜ்பத் ராய் (எல்.எல்.ஆர்) அரசு மருத்துவமனையில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து லாலா லஜ்பத் ராய் மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று (24.10,23) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“சில உடல் உபாதைகள் இருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறார்கள், இப்போது கூடுதலாக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். அங்கு தானம் செய்யப்பட்ட இரத்தத்தில் நடைமுறை ரீதியாக மேற்கொள்ளப்படும் வைரஸ்களுக்கான சோதனைகளில் தவறு இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவமனையின் குழந்தை மருத்துவப் பிரிவின் தலைவர் டாக்டர் அருண் ஆர்யா கூறுகையில்,
“இது கவலைக்குரியது என்றும், இந்த சம்பவம் தவறான வகை ரத்தம் ஏற்றுவதால் ஏற்படும் அபாயங்களைக் காட்டுகிறது. ஹெபடைடிஸால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை இரைப்பைக் குடலியல் துறைக்கும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கான்பூரில் உள்ள மையத்திற்கும் அனுப்பியுள்ளோம்” என அவர் கூறினார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள டாக்டர் அருண் ஆர்யா, “ஒருவர் இரத்த தானம் செய்யும்போது, அவர் தரும் இரத்தம் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த பரிசோதிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட பிறகு, சோதனைகள் மூலம் வைரஸைக் கண்டறிய முடியாத காலம் உள்ளது – இது “சாளர காலம்” என்று அழைக்கப்படுகிறது.
பரிசோதிக்கப்படாத இரத்தம் ஏற்றியதால் தான் 14 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 6 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில், ஏழு பேருக்கு ஹெபடைடிஸ் பி, ஐந்து பேருக்கு ஹெபடைடிஸ் சி மற்றும் இருவர் எச்ஐவிக்கு நேர்மறை சோதனை செய்ததாகவும் கூறியுள்ளார்.