வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க இன்டர்போல் (interpols) போலீஸாரின் உதவியை நாட சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளான கோபாலபுரம் டிஏபி ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி, சென்னை பப்ளிக் ஸ்கூல், பாரிமுனையில் உள்ள செயிண்ட் மேரீஸ் பள்ளி
மற்றும் அண்ணாநகர், முகப்பேர், ஆர்.ஏ. புரம், பூந்தமல்லி பெரம்பூர், எழும்பூர் ஆகிய இடங்களில் உள்ள 13 க்கும் மேற்பட்ட பள்ளிகளின் இமெயிலுக்கு நேற்று காலை 10.40 மணிக்கு மெசேஜ் வந்தது.
அதில் “இந்த பள்ளியில் 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இது வெடித்து சிதறுவதற்கு முன்னர் மாணவர்களின் உயிரை காத்துக் கொள்ளுங்கள். நான் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து பதறிய பள்ளி நிர்வாகத்தினர் போலீஸுக்கு தகவல் அளித்தனர். இதனிடையே பள்ளி மாணவர்களை மைதானங்களுக்கு வரவழைத்த பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோரை அழைத்து மாணவர்களை அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுவினர், போலீஸார் பள்ளிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
பள்ளிகளில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்றும் இது வதந்தி என்றும் சோதனையில் தெரியவந்தது.
மேலும் போலீஸார் பள்ளிகளுக்கு வந்த இமெயில் மிரட்டலை பார்த்த போது அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான மெசேஜ் சென்றுள்ளது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டலை அனுப்ப, jhonflow1@protonmail.me என்ற மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டிருந்தது.
ப்ரோட்டோன் மின்னஞ்சல் சேவையைப் பொறுத்தவரை, முழுமையான என்க்ரிப்ஷனை (End to End encryption) பயன்படுத்தி வருகிறது.
இதனால், இந்த மின்னஞ்சலை யார் அனுப்பினார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். ப்ரோட்டோன் மெயிலின் அலுவலகங்கள் மற்றும் சர்வர்கள் ஸ்விட்சர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : vetri duraisamy: 6வது நாளாக தேடுதல் பணி! நீடிக்கும் மர்மம்?
இங்கு தனியுரிமை தொடர்பான சட்டங்கள் கடுமையானவை என்பதால், மின்னஞ்சலைப் பயன்படுத்துவோர் குறித்த தகவலைப் பெற அந்நாட்டு நீதிமன்றத்தின் மூலமாகவே கோரிக்கைகளை அனுப்ப வேண்டியிருக்கும்.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் இன்டர்போல் (interpols) போலீஸாரின் உதவியை நாட சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
அவரை பிடித்தால்தான் ஒரே நேரத்தில் இத்தனை பள்ளிகளுக்கு ஏன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பதை அறிய முடியும். இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப் பிரிவுக்கு (CCB) மாற்றப்பட்டிருக்கிறது.