மதுரை உலக தமிழ்ச்சங்க அரங்கில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த இந்தியாவின் ‘சமூக நீதி பெருவிழா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல். திருமாவளவன் சனாதன தர்மத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது பிராமண பெண்கள் தான் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய திருமாவளவன்..
“அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையில் சொல்லப்பட்டுள்ள அனைத்திற்கும் எதிரானது சனாதனம். இந்தியாவில் பாசிசம் என்ற சொல் தான் சனாதனம் என்ற இன்னொரு சொல்லாக உள்ளது. சனாதனம் என்றால் தொடக்கம் இல்லாதது, அழிவு இல்லாதது, மாறாதது, நிலையானது என்பது பொருள்.
வேத பரம்பரையினருக்கும் இந்தியாவின் பூர்வ குடியினருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆரியர்களுக்கும் வேதத்திற்கும் தான் சம்பந்தம் இருக்கிறது. ஆரியர்களின் வாழ்வை தொகுப்பதற்காக எழுதப்பட்ட ஒரு நூல் தான் மனுஸ்மிருதி.
மனுஸ்மிருதிக்கு எதிராக எழுதப்பட்டது தான் அரசமைப்பு சட்டம். 2000 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த சட்டத்திற்கு மாற்றாக எழுதப்பட்டது தான் அரசமைப்பு சட்டம். மனுஸ்மிருதி சட்டம் சனாதனம் பேசுகிறது. அரசமைப்பு சட்டம் ஜனநாயகம் பேசுகிறது.
பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வை நிலைப்படுதுவது தான் சனாதனம். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை உருவாக்கியவர்கள் சித் பவன் என்ற மகாராஷ்டிரா பிராமண சாதியினர். அது பிராமண சங்கம் தான்.
பிராமண சாதிக்குள் கூட சமத்துவம் கிடையாது.
சனாதன தர்மத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது பிராமண பெண்கள் தான். பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு நிலையானது என சனாதனம் சொல்கிறது. இந்தியாவில் சமத்துவமும், சகோதரத்துவமும் இல்லாத ஒரு மதம் இந்து மதம் மட்டுமே.
சாதிகளின் பெயரால் சமூகத்தை தனித்தனி தீவுகளாக பிரித்து வைத்திருப்பதன் பெயர் தான் சனாதனம். உலகம் முழுவதும் பாசிசத்திற்கு எதிரானது ஜனநாயகம். இந்தியாவில் சனாதனத்திற்கு எதிரானது ஜனநாயகம்.
பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு இல்லையென்று சொன்னால் இந்து மதத்தை தூக்கி கொண்டாட தயார்.
தந்தை பெரியார் பஞ்சமர்களை விட சூத்திரர்களை பற்றி தான் அதிகம் கவலைப்பட்டார். திருமாவளவனை விட மோடி, அமித்ஷாவை பற்றி தான் அதிகம் கவலைப்பட்டார் பெரியார்.
இந்தியா கூட்டணிக்குள் உள்ள இந்து பற்றாளர்களை பிரித்து இழுக்க மோடி முயற்சிக்கிறார். இந்தியாவின் பெயரை இந்து ராஷ்டிரம் என மாற்ற வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். நோக்கம். சனாதன தர்மத்தை அரசின் தர்மமாக அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.