சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில் பல அமைச்சர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் மருந்து, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அதிய அவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச மற்றும் அதிபர் கோட்டபாய ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என மக்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.
இதனைத் தொடர்ந்து தற்காலிக பிரதமராக ரணில் விக்கிரம சிங்க நியமிக்கப்பட்டார். இருந்த போதிலும் அத்திய அவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் அதிபர் கோட்டபாய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கை தலைநகர் கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அதிபர் கோட்டபாய ராஜபக்சவின் மாளிகை மற்றும் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.
லட்சக்கணக்கான மக்கள் மாளிகையை முற்றுகையிட்ட நிலையில், அதிபர் கோட்டபாய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடியதை தொடர்ந்து அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றினர். இருந்தும் மக்களின் போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில், வரும் புதன் கிழமை அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக கோட்டபாய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கேவிடம் உறுதி தெரிவித்துள்ளார்.
இதனால் இலக்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கோட்டபாய ராஜபக்ச பதவி விலகும் பட்சத்தில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இலங்கையில் சர்வகட்சி ஆட்சி வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர்.
இந்த நிலையில் சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில் பல அமைச்சர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை அமைச்சர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
இதன் போது சர்வகட்சி ஆட்சி அரசாங்கத்திடம் தமது பொறுப்புக்களை ஒப்படைத்து பதவி விலக தயார் என குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் அனைவரும் பிரதமரிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னராக அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ, பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் தமது இராஜினாமா கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் பல அமைச்சர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி விலகல்களை ஏற்றுக்கொண்டதாக அரச தலைவரிடம் இருந்து உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.