தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். அத்துடன் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் விஜயகாந்த்தின் உடல் அவரது வீட்டில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் அஞ்சலிக்காக இன்றும், நாளையும் அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது.
நாளை (டிசம்பர் 29ம் திகதி) மாலை 4.45 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.