கார்த்தி சிதம்பரம் மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பரப்புரை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவரது மனைவி ஸ்ரீநிதி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மானாமதுரை சென்ற அவர், காந்தி சிலை அருகேயுள்ள காங்கிரஸ் அலுவலத்தில் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு, வார்டு வார்டாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் . அப்போது அந்த பகுதிக்கு வந்த வட்டாட்சியர் செந்தில்வேல் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாக்கு சேகரிக்க அனுமதி பெற்ற விவரத்தைக் கேட்டனர்.
அப்போது திமுக, காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க அனுமதி பெறத் தேவையில்லை என்று அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கார்த்திக் சிதரம்பரம் மனைவி ஸ்ரீநிதி தனது காரில் ஏறி அமர்ந்தார்.
இதனை தொடர்ந்து கட்சியினர் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி பிரச்சாரம் செய்வதற்கு பெற்ற அனுமதியை காட்டினர்.ஆனால் அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், அதிகளவில் கூட்டம் கூட்டி வாக்கு சேகரிக்க உரிய அனுமதி பெற வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து, தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீநிதி மீது அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.