தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்றும் தமிழகத்தின் திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம், நாமக்கல், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் நாமக்கல், கருர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.