தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் மற்றும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை (12.12.2023) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
புதன் மற்றும் வியாழக்கிழமை (13.12.2023 – 14.12.2023) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (15.12.2023 – 17.12.2023) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.