வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூா், நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், இரவு நேரங்களில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மையம் சாா்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று மற்றும் நாளை (21, 22) ஆகிய தேதிகளில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, அரியலூா், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூா், நீலகிரி மாவட்டங்கள், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 23 புதன் முதல் ஆகஸ்ட் 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.