தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படங்களுள் ஒன்று சந்திரமுகி. கடந்த 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த சந்திரமுகி படத்தில், ரஜினிகாந்த் பேசிய டெலிடட் சீன் ஒன்றை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தீயாக ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
மணிச்சித்ரதாழு என மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படத்தை 2005ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகியாக பி. வாசு இயக்கினார். ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர், சோனு சூட், வினீத், மாளவிகா என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்த அந்த திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியது.
இந்நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை தற்போது பி.வாசு இயக்கியுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற எம்.எம் கீரவாணி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று (28.09.23) சந்திரமுகி 2 வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்த 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த சந்திரமுகி படத்தை பேய் படமாக காட்டாமல் மனோதத்துவ முறையில் டாக்டர் சரவணன் கங்காவை எப்படி குணப்படுத்துகிறார் என்பதை காட்டியிருப்பார்கள். அதுதான் சந்திரமுகி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் டெலிடட் சீன் படத்தில் இருந்திருந்தால் சந்தரமுகி படமே ஓடியிருக்காது என கலாய்த்து வருகின்றனர்.
தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் பரவி வரும் அந்த காட்சியில்..
நடிகர் ரஜினிகாந்த் ஆச்சார்யா ஏன் வேட்டயபுர அரண்மனையில் தங்கவில்லை என்பதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. பேய், பிசாசு, பூதம் எல்லாமே இருப்பது உண்மை தான். மனோதத்துவ ரீதியாக நான் சந்திரமுகியை விரட்டுகிறேன். ஆச்சார்யா மாந்திரீக ரீதியாக ஓட்டுவார் என பேசியுள்ள காட்சிகளை தான் படத்தில் இருந்து தூக்கி உள்ளனர்.
அந்த வசனங்கள் பூமர் வசனங்கள் என்றும் நல்லவேளை பி. வாசு அந்த காட்சிகளை கடைசி நேரத்தில் படத்தில் இருந்து தூக்கி விட்டார். இல்லை என்றால் ரஜினிகாந்தின் பாபா படத்துக்கு ஏற்பட்ட நிலைமை தான் சந்திரமுகிக்கும் நடந்திருக்கும் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.