சென்னை மெரினா கடற்கரையில் திடீரென ராட்சச சுழல் காற்று வீசிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று இரவு 10 மணி அளவில் கடற்கரை மணல் பரப்பில் திடீரென சுழல் காற்று வீசியதுடன், காற்றுடன் மணலும் வானுயர எழுந்தது. அத்துடன், அங்கிருந்த கடைகளையும் சிறிது சேதப்படுத்தியது.
இந்த சுழல் காற்றால் யாருக்கும் நல்வாய்ப்பாக காயம் எதுவும் ஏற்படவில்லை. மெரினா கடற்கரையில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்று, அங்கு சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் கூறுகையில்,
இது இயற்கை நிகழ்வுதான். இது டஸ்ட் டெவில் என்று அழைக்கப்படும். இந்த நிகழ்வு பெரும்பாலும் பாலைவன பகுதிகளில் அவ்வப்போது நடைபெறும்.
ஒரு மேற்பரப்பு வெப்பம் அடையும்போது, அந்த வெப்பத்தால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்று உருவாகும். இந்த குளிர்ந்த காற்றுடன் சூடான காற்று ஒன்றுக்கொன்று மோதும்போது மேற்பரப்புக்கு அருகில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது.
இந்த வெற்றிடத்தை விட்டு வெளியேறும்போது இது குறைந்த தாழ்வழுத்த பகுதியை உருவாக்குகிறது.இந்த வெற்றிடத்தை நிரப்ப காற்று அந்த வெற்றிடத்தை நோக்கி பயணிக்கும்போது இது போல் நிகழும்” என்று தெரிவித்தார்.