100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, கடந்த 2014 இல் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்று ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் கூறியதை அடுத்து பரபரப்பு கிளம்பியது.
அதன் அடிப்படையில், தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதையடுத்து தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டிய தோனி, இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அதன் செய்தி ஆசிரியர், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோரிடம் 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தோனி ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கை தள்ளுபடி செய்யமுடியாது என்று தெரிவித்த நீதிபதி ஒருவேளை அப்படி தள்ளுபடி செய்தால் முதன்மை வழக்கில் தாமதம் ஏற்படும் என்றும், இதனால் சாட்சி விசாரணையை எதிர்கொள்ளுமாறு சம்பத்குமாருக்கு பரிந்துரை செய்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.