ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளால் ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதால் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :
கடந்த ஆண்டை போல் மழைநீர் தேங்கக்கூடாது என்பதற்காக சென்னை முழுவதும் மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணி தமிழக அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் ஒருநாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்த தமிழக அரசை இந்த நேரத்தில் வன்மையாக கண்டிக்கிறேன்.
மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் சென்னையில் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளது. சாலைகள் தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.